27வது நாளாக விவசாயிகள் போராட்டம்.. மண்டி ஏஜென்டுகள் கடையடைப்பு..

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 27வது நாளை எட்டியுள்ளது. இதற்கிடையே பஞ்சாப்பில் மண்டி ஏஜென்டுகள் இன்று(டிச.22) முதல் 4 நாட்கள் கடையடைப்பு செய்கின்றனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.22) 27வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் லாபம் என்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோரும், தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர். ஆனால், சட்டங்களை ரத்து செய்ய முடியாது. அதேசமயம், விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை(எம்.எஸ்.பி) உறுதி செய்யும் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு கூறியது. அந்த திட்டத்தையும் விவசாயிகள் போராட்டக் கூட்டு நடவடிக்கை குழு நிராகரித்து விட்டது.

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் இருக்கிறது. இதில் சுப்ரீம் கோர்ட், விவசாயிகளின் ஜனநாயகப் போராட்டத்தைத் தடை செய்ய முடியாது என்று கூறியுள்ளது. இந்நிலையில், டெல்லி சிங்கு எல்லையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து முகாமிட்டு போராடி வருகின்றனர். இதே போல், டெல்லி-ஹரியானா சாலைகளில் மற்ற எல்லைகளிலும் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். சிங்கு போராட்டத்திற்கு இடையே நேற்று ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதே போல், பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதற்கிடையே, பஞ்சாப்பில் நெல், கோதுமை மண்டிகளில்(ஒழுங்குமுறை விற்பனை கூடம்) ஏஜென்டுகள் 6 பேரின் அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித் துறையினர் கடந்த 2 நாட்களாக திடீர் ரெய்டுகளை நடத்தினர்.

இதையடுத்து, இன்று(டிச.22) முதல் நான்கு நாட்களுக்கு மண்டி ஏஜென்டுகள் தங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர் என்று ஏஜென்டுகள் சங்கத்தின் தலைவர் விஜய் கர்லா தெரிவித்தார். விவசாயிகளின் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்பதால், மத்திய அரசு இப்படி பகிரங்கமாகப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டினார். வருமானவரித் துறை ரெய்டுகளை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்கும் கண்டித்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு மத்திய அரசு பல வழிகளைக் கையாளுவதாக அவர் குற்றம்சாட்டினார். சிரோன்மனி அகாலிதளம் கட்சித் தலைவர் சுக்பீர்சிங் பாதல் கூறுகையில், மத்திய அரசு மீண்டும் முதலில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு, விவசாயிகளை அழைக்கிறது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதுதான் ஒரே கோரிக்கை என்று விவசாயிகள் கூறிய பிறகும், மத்திய அரசு தீர்வு காண முன்வராமல் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்று தெரிவித்தார்.

More News >>