கேரளாவில் 9 மாதங்களுக்குப் பின் இன்று மது பார்கள் திறப்பு... குடிமகன்கள் உற்சாகம்
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட மது பார்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் 'குடிமகன்'கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.கொரோனா பரவல் காரணமாகக் கேரளாவில் கடந்த மார்ச் மாதம் மதுக்கடைகள், பார்கள் மற்றும் கள்ளுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் 'குடிமகன்'கள் கடும் சிரமம் அடைந்தனர். மது கிடைக்காததால் சில தற்கொலை சம்பவங்களும் நடந்தன.
இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்ததைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு மது விற்பனைக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. ஆனால் கடைகளுக்குச் சென்று நேரடியாக மது வாங்கினால் கொரோனா அதிகரிக்கும் என்பதால் மது வாங்குவதற்காக ஒரு செயலி (ஆப்) உருவாக்கப்பட்டது. இந்த செயலியில் முன்பதிவு செய்தால் மட்டுமே கடைகளுக்குச் சென்று மது வாங்க முடியும்.
இந்நிலையில் கடைகளில் கூட்டம் அதிகரிப்பதைத் தடுக்க மது பார்களில் பார்சல் மூலம் மது வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த செயலியைப் பயன்படுத்தி குடிமகன்கள் வழக்கம்போல மது வாங்கத் தொடங்கினர். ஆனால் பார்கள் திறக்கப்படாததால் பார்களில் சென்று மது அருந்த முடியாதவர்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து மது பார்களையும் திறக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன.இதையடுத்து மது பார்களை மீண்டும் திறக்க கேரளா அரசு தீர்மானித்தது. இதுதொடர்பாக நேற்று நள்ளிரவு கேரள அரசு மது பார்களை திறக்க உத்தரவிட்டது. இதன்படி இன்று முதல் கேரளா முழுவதும் பார்கள் திறக்கப்பட்டன.
இது தவிர பீர் பார்லர்களும், கள்ளுக் கடைகளும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே மதுக்கடைகள் இதுவரை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தன. தற்போது மதுக்கடைகளின் விற்பனை நேரத்தையும் கூட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கும். மது பார்களில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.