கர்ப்ப காலத்தில் குமட்டலா? பயணம் செய்யும்போது தலைசுற்றலா? இதோ தீர்வு!

குழந்தையை வயிற்றில் சுமப்பது சந்தோஷமான விஷயம். ஆனால், இன்னோர் உயிர் வயிற்றில் வளரும்போது சிற்சில உபாதைகள் கர்ப்பிணிக்கு உண்டாகும். அவற்றையெல்லாம் தாங்கியே பெண்கள் தாய்மை அடைகின்றனர். கர்ப்ப காலத்தில் பெண்களுக்குக் குமட்டல் ஏற்படும். இவ்வகை குமட்டலைத் தவிர்ப்பது இஞ்சி டீ அல்லது இஞ்சி சாறு அருந்தலாம். கர்ப்ப காலம் மட்டுமல்ல, ஏதேனும் அறுவைசிகிச்சை மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை பெறுவோருக்கு ஏற்படும் குமட்டலையும் இஞ்சி டீ குணப்படுத்தும்.

இஞ்சி சில தகவல்கள்

இஞ்சி 'ஸிஞ்சிபெரேஸி' என்ற தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது. மஞ்சள், சித்தரத்தை மற்றும் ஏலக்காய் ஆகியவை இதனுடன் நெருங்கிய தொடர்புடையவையாகும். இஞ்சியில் பீனால் கூட்டுப்பொருள்கள், எளிதில் ஆவியாகக்கூடிய ஜிஞ்சரோல் என்ற எண்ணெய் ஆகியவை உள்ளன. இவையே குமட்டல் தொடர்பான உபாதைகளை நீக்குகின்றன. இஞ்சியைப் பச்சையாகவோ, உலர்த்தியோ, பொடியாக்கியோ, எண்ணெயாகவோ அல்லது சாறாகவோ சேர்த்துக்கொள்ளலாம்.

பயணிக்கும்போது தலைச்சுற்றல்

வாகனத்தில் நெடுந்தூரம் பயணித்தால் பலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் மற்றும் உடல் குளிர்ந்து வியர்வை வருதல் போன்ற உபாதைகள் ஏற்படலாம். பயணம் செய்யும்போது இஞ்சி டீ பருகினால் இதுபோன்ற தொல்லைகள் வராது.

கொலஸ்ட்ராலும் இதய ஆரோக்கியமும்

இஞ்சி டீயை சூடாகத் தொடர்ந்து அருந்தி வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்தம் உறைதலைத் தடுக்கிறது. நெஞ்செரிச்சலிருந்து நிவாரணம் பெறுவதற்கு இஞ்சி டீ உதவுகிறது. இஞ்சி டீ அருந்துவதால் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு, இரத்த ஓட்டமும் சீராகிறது.

உடல் எடை

இஞ்சி டீயை சூடாக அருந்தினால் வயிறு நிறைந்த திருப்தி கிடைக்கும். அதன் மூலம் நொறுக்குத் தீனி தின்பது குறையும். இதனால் உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதிலும், அது தொடர்பான தொல்லைகளிலிருந்து நிவாரணம் தருவதிலும் இஞ்சி டீ உதவுகிறது.

மூட்டுவலி

இஞ்சிக்கு அழற்சிக்கு எதிராகச் செயல்படும் திறன் உள்ளது. கீல்வாதத்தின் காரணமாக வலியினால் அவதிப்படுவோர் இஞ்சியைத் தொடர்ந்து சேர்த்துக்கொள்வதின் மூலம் நிவாரணம் பெறலாம். தசைவலி, தலைவலி, தொண்டை வலியை போக்குவதோடு, மாதவிடாய் காலத்தில் வயிற்றில் ஏற்படும் உபாதையையும் இது தீர்க்கிறது.

இஞ்சி டீயை தொடர்ந்து அருந்துவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராகும். மூளையின் செயல்பாடு சீராகக் காக்கப்படுவதால், முதுமையில் அல்சைமல் என்னும் நினைவு குழப்பம், மறதி ஆகியவை ஏற்படும் வாய்ப்பு குறையும். மனஅழுத்தத்தினால் ஏற்படும் தலைவலியை இஞ்சி டீ போக்கும். செரிமான கோளாறுகளைக் குணமாக்கி, ஜீரணத்தைத் தூண்டும் இயல்பும் இஞ்சிக்கு உள்ளது.

More News >>