இப்போது என்ன அவசரம்? கேரள சட்டசபையின் அவசர கூட்டத்திற்கு கவர்னர் அனுமதி மறுப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவதற்காக நாளை கூட்ட தீர்மானித்திருந்த கேரள சட்டசபை கூட்டத்திற்கு அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கான் அனுமதி மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பஞ்சாப், ராஜஸ்தான் உள்பட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக டெல்லியில் முகாமிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. எல்லா பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிவடைந்தது. இந்நிலையில் விவசாயிகள் சங்கத்தினருடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி உள்பட சில மாநிலங்கள் இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.இந்நிலையில் கேரளாவிலும் வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. நேற்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நாளை சட்டசபையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் இந்தக் கூட்டத்திற்கு அனுமதி கோரி கவர்னரிடம் சிபாரிசு செய்யவும் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இந்த அவசர கூட்டத்திற்குக் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுத்துள்ளார். இப்போது சட்டசபையைக் கூட்ட என்ன அவசர தேவை இருக்கிறது என அவர் கேட்டுள்ளார். இதையடுத்து நாளை கேரள சட்டசபை கூட்டம் கூடுமா என்பது சந்தேகமே.நிலைமையைச் சமாளிப்பதற்காக கவர்னரை கேரள விவசாயத் துறை அமைச்சர் சுனில் குமார் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் சந்தித்துப் பேசவும் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

More News >>