காவிரி மேலாண்மை வாரியம்: பறக்கும் ரயிலை மறித்து தேமுதிகவினர் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை பறக்கும் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசு காவரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மேலும் மூன்று மாதம் கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றம் விதித்த காலக்கெடுவை வீணடித்துவிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
அதிமுக, பாஜகவை தவிர பெரும்பாலான கட்சிகள் போராட்டத்தில குதித்துள்ளன.அந்த வகையில், இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாஸ்திரிபவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முக்கொம்பு ஆற்றில் இறங்கி விவசாயிகள் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ரயில் நிலையத்திற்குள் சென்ற தேமுதிகவினர் பறக்கும் ரயிலை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 200க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்களை கைது செய்தனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com