ஏலக்காய் திருட முயன்ற தொழிலாளி சுட்டுக்கொலை தோட்ட மேற்பார்வையாளர் கைது
ஏலக்காய் திருட முயன்ற தொழிலாளியை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தோட்ட மேலாளரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் இடுக்கி அருகே நடந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்கள் உள்ளன. இங்குள்ள வண்டன்மேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சக்குபள்ளம் என்ற இடத்தில் ஒரு ஏலக்காய் தோட்டம் உள்ளது. இது கோட்டயத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானதாகும். இந்த தோட்டத்தில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் அனூப்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தோட்டத்தில் ஏலக்காய் திருடு போவது அதிகரித்து வந்தது. இதையடுத்து இரவில் திருடர்களை கண்காணிக்க தோட்ட உரிமையாளர் மற்றும் மேலாளர் அனூப் ஆகியோர் திட்டமிட்டனர். இதன்படி நேற்று இரவு இருவரும் துப்பாக்கியுடன் ஏலத் தோட்டத்தில் காவல் இருந்தனர். நள்ளிரவில் தோட்டத்திற்குள் ஒரு மர்ம நபர் புகுந்தது தெரியவந்தது. இதை பார்த்த அனூப் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வண்டன்மேடு போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்ததில் சுட்டுக் கொல்லப்பட்டது வடமாநில தொழிலாளி என தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக இடுக்கி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக தோட்ட மேலாளர் அனூப்பை போலீசார் கைது செய்தனர். தோட்ட உரிமையாளர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இடுக்கி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.