முட்டை சத்து நிறைந்த உணவு... ஆனால், ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம் தெரியுமா?

முட்டை எல்லா இடங்களிலும் எப்போதும் கிடைக்கக்கூடியது. ஊட்டச்சத்து நிறைந்ததுமாகும். உடல் எடை குறைய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு முட்டை ஏற்ற உணவாகும். முட்டையில் புரதம் (புரோட்டீன்) அதிக அளவில் உள்ளது. ஆகவே, அதை சாப்பிட்டால் சீக்கிரம் பசியெடுக்காது. காலை உணவில் முட்டை சாப்பிட்டால் மதிய உணவு வரைக்கும் திருப்தியாக உணர இயலும். நன்கு அவித்த முட்டையில் கார்போஹைடிரேடு குறைந்த அளவில் காணப்படும். பலர் மாலை சிற்றுண்டியில் முட்டையை சேர்த்துக் கொள்கின்றனர். உடற்பயிற்சி செய்த பிறகு சிலர் சாப்பிடுகின்றனர். ஆனால், ஒருநாளைக்கு அதிக பட்சம் எத்தனை முட்டைகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது என்ற கேள்வி எழுகிறதல்லவா?

ஒரு முட்டையில் 200 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது. மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (MUFA) இதில் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தவை. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை இரண்டுமே இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கின்றன. புரதம், கோலைன், வைட்டமின்கள் ஏ மற்றும் டி, இவற்றுடன் பயோட்டின் ஆகிய ஊட்டச்சத்துகள் முட்டையில் உள்ளன. நாளொன்றுக்கு ஒன்று முதல் இரண்டு முட்டைகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இரண்டு முட்டைகள் சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது.

முட்டையில் அதிகமாக புரதம் இருப்பதால், இரண்டுக்கும் மேற்பட்ட முட்டைகள் சாப்பிடும்போது சிறுநீரகங்கள் அதிகமாக வேலை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. முட்டையில் நார்ச்சத்து கிடையாது. இன்னும் சிலருக்கு முட்டையால் ஒவ்வாமை உண்டாகும். அப்படிப்பட்டவர்கள், அதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். புரத சத்து அதிகம் கொண்டிருக்கும் முட்டை உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால், ஒருநாளைக்கு அதிக பட்சம் இரண்டு முட்டைகள் மட்டுமே சாப்பிடலாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

More News >>