இந்தியாவில் எந்த இடத்திலிருந்தும் ஓட்டு போடலாம் மத்திய தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை
இந்தியாவில் எந்த இடத்தில் இருந்தும் ஓட்டு போடும் வசதியை ஏற்படுத்துவது குறித்து மத்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்த புதிய முறையை அமல்படுத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தலில் ஓட்டு போடுவது என்பது ஒரு குடிமகனின் மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஆனால் பலர் தொழில் காரணமாகவும், வேறு பல காரணங்களுக்காகவும் சொந்த ஊரை விட்டு வெகுதொலைவில் வசிப்பது உண்டு. ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு செல்வது என்பது எல்லோராலும் முடியும் காரியமல்ல. இதனால் தான் ஓட்டுப்பதிவு சதவீதம் கணிசமாக குறைகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மத்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் எந்த இடத்தில் இருந்தும் ஓட்டு போடுவதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் வாக்குப்பதிவு எந்திரங்களை நவீனப்படுத்துவது குறித்து மத்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தற்போது வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரங்களில் இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இன்டர்நெட் இணைப்பு கொடுத்தால் அதன் மூலம் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பு இருக்கும். இதனால் தான் இண்டர்நெட் இணைப்பு ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் வேறு இடங்களில் இருப்பவர்கள் ஓட்டு போட வேண்டுமென்றால் வாக்குப்பதிவு எந்திரத்தில் இன்டர்நெட் வசதியை கொடுக்க வேண்டும்.
அது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இண்டர்நெட் இணைப்பு கொடுக்காமல் எப்படி புதிய வசதியை ஏற்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக சென்னை, மும்பை மற்றும் டெல்லி ஐஐடிகளில் உள்ள நிபுணர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தற்போது தீவிரமாக இது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகின்றனர். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்த புதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்பதில் மத்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. அதற்கு முன்பாக சோதனை அடிப்படையில் சில தேர்தல்களில் இதை பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.