அமெரிக்காவில் பயங்கரம்: கார் கொள்ளையர்களால் சுடப்பட்ட இந்தியர்
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிகாகோவில் வசித்து வந்த இந்தியர் கார் கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த துணிகர சம்பவம் ஞாயிறன்று மாலை 4:15 மணியளவில் நடந்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் முகமது முஜூபுதீன் (வயது 43). இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு பணியாற்றி வந்த அவர், ஞாயிறு மாலை காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கொள்ளையர்கள் அவர் காரை மறித்துள்ளனர். காரை விட்டு இறங்கும்படி அவரை மிரட்டியுள்ளனர்.
காரை விட்டு இறங்கிய முகமது முஜூபுதீனை துப்பாக்கியால் சுட்டு விட்டு, காரை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. மிக்ஸிகன் அவென்யூ என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரை சிகாகோ பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அவருடன் தங்கியிருப்பவர் ஹைதராபாத்தில் வசிக்கும் முகமதுவின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். தாங்கள் உடனே அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு செல்ல உதவி செய்யுமாறு முகமது முஜூபுதீனின் மனைவியும் பிள்ளைகளும் தெலங்கானா தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கே.டி. ராம ராவை கேட்டுக்கொண்டுள்ளனர்.