வாடகை, தண்ணீர், மின்சாரம் வரிசையில் குப்பை.. சென்னை மாநகராட்சியின் அதிரடி உத்தரவு!
2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் சொத்து வரி கட்டும்போது குப்பைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு சுமார் 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகளை முழுமையாக செயல்படுத்தும் விதமாக 19,000 அதிகமான பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று குப்பைகள் பெறப்படுகிறது. அவை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இருப்பினும், தலைநகர் சென்னை மாநகராட்சியை தூய்மையாக வைத்து கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, குப்பைகள் பெற கட்டணம் செலுத்தும் விதமாக திடக்கழிவு மேலாண்மை விதிகளில் திருத்தம் செய்து கடந்த கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது. திருத்தப்பட விதியின்படி, வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 வரையும், திருமண மண்டபங்களுக்கு 1000 முதல் 10,000 வரையும், உணவகங்களுக்கு 300 முதல் 5,000 வரையும் கட்டணம் வசூல் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்நிலையில், 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த கட்டணத்தை சொத்து வரி செலுத்தும்போது, குப்பைக்கான கட்டணத்தை செலுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் சும்மாவே வீட்டு வாடகை அதிகம், இந்த நிலையில், குப்பைகளுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும் நடைமுறை அமலுக்கு வந்தால் வீட்டு வாடகையில் குப்பைக்கு தனி காசு கொடுக்க வேண்டும் என வாடகை வீட்டில் உள்ள மக்கள் கவலை அடைந்துள்ளனர்.