கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு என்ன தண்டனை? இன்று தீர்ப்பு
கேரளாவில் கன்னியாஸ்திரி அபயா (21) கொல்லப்பட்ட வழக்கில் பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றம் நிரூபணமாகி உள்ளது என்று நேற்று திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் தெரிவித்தது. இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படுகிறது.கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த அபயா என்ற கன்னியாஸ்திரி கடந்த 1992ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி அவர் தங்கியிருந்த பயஸ் டென்த் என்ற கன்னியாஸ்திரி ஆசிரமத்தில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து முதலில் உள்ளூர் போலீசாரும், பின்னர் குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் அபயா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி விசாரணையை முடித்தனர். இதை எதிர்த்து அபயாவின் தந்தையான தாமஸ் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், தனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் எனவே இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், கன்னியாஸ்திரி அபயா மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி சிபிஐ விசாரணையைத் தொடங்கியது.
ஆனால் சிபிஐயும் இந்த வழக்கை முறையாக விசாரணை நடத்தவில்லை. சிபிஐயின் 6 குழுக்கள் இந்த வழக்கை விசாரித்தன. முதல் 3 குழுக்களும் அபயா தற்கொலை செய்துகொண்டதாகவே நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் நீதிமன்றம் உறுதியாக இருந்ததால் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐயின் 5வது குழு தான் அபயா கொலை செய்யப்பட்டதாகக் கண்டுபிடித்தது. ஆனால் கொலைக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கை முடித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று என்று இந்த 5வது குழுவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்பிறகும் நீதிமன்றம் இந்த வழக்கை முடிக்க விடவில்லை. கண்டிப்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தது. இதன் பிறகு அமைக்கப்பட்ட 6வது சிபிஐ குழு தான் அபயா கொலை வழக்கில் பாதிரியார்கள் தாமஸ், ஜோஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோரை கைது செய்தது.
பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு இடையான தகாத உறவை அபயா பார்த்து விட்டதால் 3 பேரும் சேர்ந்து அடித்து கிணற்றில் போட்டதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் தொடங்கியது. ஆனால் இந்த வழக்கில் பாதிரியார் ஜோசுக்கு எதிராகக் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சனில்குமார், பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என நேற்று தீர்ப்பளித்தார். இருவர் மீதும் கொலைக் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படுகிறது. கன்னியாஸ்திரி அபயா கொல்லப்பட்டு 28 வருடங்களுக்குப் பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.