வெள்ளை மாளிகை அதிகாரிகளாக 2 இந்தியர்கள் நியமனம்..
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அதிகாரிகளாக 2 இந்திய அமெரிக்கர்களை புதிய அதிபர் ஜோ பிடன் நியமித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிட்டனர். அதிபர் டிரம்ப் இந்தியப் பிரதமர் மோடியுடன் மிகவும் நெருக்கமாகப் பழகி வந்தார். இந்தியாவில் அவரை வரவேற்று நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை மோடி நடத்தினார். அதனால், டிரம்ப் தான் இந்தியாவின் உற்ற நண்பனாகத் தெரிந்தார்.
ஆனால், ஜோ பிடன் தனது கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராகத் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசை அறிவித்தார். தொடர்ந்து பல இந்தியர்களுக்குத் தேர்தல் பணியில் வாய்ப்பு தரப்பட்டது.இந்நிலையில், அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியுற்றார். புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனும், புதிய துணை அதிபர் கமலா ஹாரிசும் ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளனர். தற்போது அதிபரின் வெள்ளை மாளிகை நிர்வாகத்தில் புதிய அதிகாரிகளை ஜோ பிடன் நியமித்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளியைக் கொண்ட இந்திய அமெரிக்கர்கள் பலருக்கும் பல்வேறு நிலைகளில் வாய்ப்பு தரப்பட்டு வருகிறது.
தற்போது வெள்ளை மாளிகையின் நிர்வாகத்தில் கூடுதல் அதிகாரிகளைத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவித்திருக்கிறார். இதில், இந்திய அமெரிக்கர்கள் வினய் ரெட்டி, கவுதம் ராகவன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். வினய் ரெட்டி, வெள்ளை மாளிகை பணியாளர் துறை துணை இயக்குனராகவும், கவுதம்ராகவன் அதிபரின் தொடர்பு துறையில் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல், அன்னி பிலிபிக், ரயான் மோண்டாயா, புரூஸ் ரீட், எலிசபெத் வில்கின்ஸ் உள்ளிட்ட அமெரிக்கர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்கா தற்போது கொரோனா பரவல், பொருளாதார சிக்கல் உள்பட பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில் அவற்றில் இருந்து மீண்டு முன்னேற்றம் காண்பதற்கு வெள்ளை மாளிகை நிர்வாகத்தில் புதிய டீம் உருவாக்கப்படுவதாகக் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.