இயக்குனர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பாலியல் புகார் அளித்த நடிகை கேள்வி..
கடந்த ஆண்டு பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது நடிகைகள் பலர் பாலியல் தொல்லை புகார் தெரிவித்தனர். தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் பிரபல இந்தி நடிகரும், தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்தவருமான நானா படேகர் மீது தனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை தந்ததாக மும்பை போலீசில் புகார் அளித்தார். அந்த வழக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பிறகு தனுஸ்ரீ வெளிநாடு சென்று விட்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் திரும்பி வந்தார். திடீரென்று வெளிநாடு சென்றது பற்றி அவர் கூறும் போது,நடிகர் மீது நான் பாலியல் புகார் அளித்ததும் அவரது அடியாட்கள் என்னையும் என் குடும்பத்தினையும் மிரட்டினார்கள். அதற்கு பயந்து வெளிநாடு சென்றுவிட்டேன். நான் அளித்த புகாரில் போலீசார் ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.சில மாதங்களுக்கு முன் நடிகை பாயல் கோஷ் இந்தி பட இயக்குனரும், தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தவருமான அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறினார்.
படத்தில் நடிக்க வாய்ப்பளிப்பதாக தன் வீட்டுக்கு அழைத்து என்னைக் கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயன்றார். அவரை தள்ளிவிட்டு நான் தப்பி வந்தேன் என்றார். இது குறித்து மும்பை போலீசில் புகார் அளித்தார் பாயல். போலீசார் அனுராக் காஷ்யப்பை நேரில் அழைத்து விசாரித்தனர். அப்போது, பாயல் பொய் சொல்கிறார். சம்பவம் நடந்ததாகக் கூறும் நாளில் நான் இலங்கையில் படப்பிடிப்பில் இருந்தேன் என்று பதில் அளித்தார். அதன்பிறகு அந்த வழக்கு கிடப்பில் சென்றது.
இந்நிலையில் நடிகை பாயல் கோஷ் மீண்டும் சர்ச்சை கிளப்பி உள்ளார். அவர் போலீஸுக்கு கேள்வி எழுப்பினார். அவர் கூறும்போது,அனுராக் காஷ்யப் என்னை பலாத்த காரம் செய்ய முயன்றது பற்றி நான் போலீசில் புகார் அளித்து 4 மாதம் ஆகிவிட்டது. அதன் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான ஆதாரமும் கொடுத்திருக்கிறேன். இன்னும் நான் சாக வேண்டுமா? அப்போதுதான் நடவடிக்கை எடுப்பார்களா? இதற்கு முன் வைத்த கோரிக்கையிலும் மும்பை போலீஸ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இது பெண்களின் பிரச்சனை. நாம் என்ன முன்னுதாரம் செய்கிறோம் என்பதை போலீசார் அறிந்துக்கொள்ள வேண்டும் என்றார்.