சட்டசபையை கூட்ட அனுமதி மறுப்பு... கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள முதல்வர் கடிதம்
மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காகக் கேரள அரசு இன்று நடத்த இருந்த சட்டசபை கூட்டத்திற்கு கவர்னர் அனுமதி மறுத்ததற்குக் கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கவர்னர் ஆரிப் மும்மது கானின் இந்த செயலை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளார்.மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக இன்று கேரள சிறப்புச் சட்டசபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
கடந்த இரு தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்றால் மாநில கவர்னரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும். அமைச்சரவை கூடி எடுக்கும் தீர்மானத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பது தான் வழக்கமாகும். இந்நிலையில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கானிடம் சட்டசபையைக் கூட்ட அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால் சட்டசபையைக் கூட்ட கவர்னர் அனுமதி மறுத்துவிட்டார். இது தொடர்பாக அவர் கேரள அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், சட்டசபையைக் கூட்டுவதற்கு தற்போது என்ன அவசர தேவை உள்ளது என்று கேட்டிருந்தார். அமைச்சரவை கூடி எடுத்த முடிவுக்கு கவர்னர் அனுமதி மறுத்தது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்படக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கவர்னர் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும் நேற்றிரவு திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகை முன் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் கவர்னர் ஆரிப் முகம்மது கானின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கவர்னருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானதாகும். பெரும்பாலும் உணவுப் பொருட்களுக்குக் கேரளா வெளிமாநிலங்களை நம்பியே உள்ளது. விவசாயிகளின் போராட்டத்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டால் கேரளாவுக்கு அது கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தான் அவசரமாகச் சட்டசபையைக் கூட்டத் தீர்மானிக்கப்பட்டது என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே கவர்னர் அனுமதி மறுத்துள்ள போதிலும் சட்டசபையைக் கூட்டி வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவதில் கேரளா உறுதியாக உள்ளது. ஜனவரி 8ம் தேதி ஏற்கனவே பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. அன்றோ அல்லது அதற்கு மறுநாளோ வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றக் கேரள அரசு முடிவு செய்துள்ளது.