அண்ணாத்த படப்பிடிப்பிலிருந்து டிச. 30ல் வரும் ரஜினிகாந்த்.. தினமும் 14 மணிநேரம் ஷூட்டிங்..
2021ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்ற நிலையில் அரசியல் கட்சித் தலைவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எனப் பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில் கடந்த மாதம் கட்சி தொடங்குவது பற்றி அறிவித்தார் ரஜினிகாந்த், டிசம்பர் 31ம் தேதி புதிய கட்சி தொடங்குவது பற்றி அறிவிப்பதாகவும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்றும் கூறினார்.
அதன்பிறகு அவர் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடக்கும் ஷுட்டிங்கில் பங்கேற்று நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் கொரோனா பாதுகாப்பு கவச அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரஜினி காந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு பயோ பப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மற்ற டெக்னீஷியன், பணியாளர்களுக்கும் கொரோனா விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன, அண்ணாத்த படப்பிடிப்பை வேகமாக முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
ரஜினிகாந்த்தும் முழு ஒத்துழைப்பு அளித்து காலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிவரை சுமார் 14 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். டிசம்பர் 30ம்தேதி ஷூட்டிங்கிலிருந்து சிறிய பிரேக் எடுத்துக் கொண்டு சென்னை வருகிறார். 31ம் தேதி புதிய கட்சி தொடங்குவது பற்றிய தேதி அறிவிக்க உள்ளார். அதன்பிறகு அவர் மீண்டும் ஷூட்டிங் புறப்பட்டுச் செல்கிறார். பிறகு சில நாட்களில் படப்பிடிப்பு முடித்து விட்டு சென்னை வந்து புதிய கட்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகிறார். இதற்கிடையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்தல் பிரச்சார பணிகளைத் தொடங்குவதற்காக ரஜினியிடமிருந்து அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். ரஜினி தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வாரா? அல்லது குறிப்பிட்ட நகரில் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பாரா என்பது குறித்து ஆலோசனை நடக்கிறது. ரஜினியின் உடல்நிலை கருதியும், கொரோனா தொற்று பரவல் நீங்காத நிலையிலும் அவரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். ஆனால் அதையும் மீறி ரஜினி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
ஏற்கனவே அளித்த பேட்டியில் என் உயிர் தமிழக மக்களுக்காகப் போகிறதென்றால் போகட்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளாராக இருக்க மாட்டேன் என்று மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். முதல்வர் வேட்பாளரை அடையாளம் காட்டுவேன் எனவும் கூறி இருந்தார். அவர் தேர்தலில் போட்டியிடுவாரா? மாட்டாரா? என்பதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. அதேபோல் கூட்டணி அமைப்பதா? தனித்துப் போட்டியிடுவதா என்ற கேள்வியும் உள்ளது. ரஜினியின் நண்பரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தற்போது 2வது கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவர் ஏற்கனவே ரஜினியிடம் ஆதரவு கேட்பேன். தேவைப்பட்டால் அவரது கட்சியுடன் கூட்டணி அமைப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் 31ம் தேதி தனிக்கட்சி தொடக்கம்பற்றி அறிவிப்பு வெளியானவுடன் தற்போதுள்ள அரசியல் சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டு புதிய அரசியல் களம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.