கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு பாதிரியார் தாமசுக்கு இரட்டை ஆயுள் தண்டனை திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா 28 வருடங்களுக்கு முன் கொல்லப்பட்ட வழக்கில் திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் தலா 5 லட்சம் அபராதமும், ஆதாரங்களை அழித்ததற்காக கூடுதலாக 7 வருடங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த அபயா (21) என்ற கன்னியாஸ்திரி, அவர் தங்கியிருந்த பயஸ் டென்த் என்ற ஆசிரமத்திலுள்ள கிணற்றில் கடந்த 28 வருடங்களுக்கு முன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய உள்ளூர் போலீசாரும், குற்றப் பிரிவு போலீசாரும் அபயா தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.
ஆனால் அபயாவின் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய சிபிஐயின் மூன்று குழுக்களும் அபயா தற்கொலை செய்துகொண்டதாகவே கூறியது. ஆனால் தீவிர விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து நடத்திய விசாரணையில் தான் அபயா கொல்லப்பட்டார் என கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அபயாவை கொலை செய்ததாக பாதிரியார்கள் தாமஸ், ஜோஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய 3 பேரை சிபிஐ கைது செய்தது. பின்னர் இந்த வழக்கில் இருந்து பாதிரியார் ஜோஸ் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் வழக்கு விசாரணை முடிந்தது.
இதையடுத்து 22ம் தேதி (நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி சனில் குமார் கூறியிருந்தார். இதன்படி நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் அபயாவை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி கூறினார். மேலும் தண்டனை விவரங்கள் 23ம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஆதாரங்களை அளித்ததற்காக இருவருக்கும் கூடுதலாக ஏழு வருடங்கள் சிறையும், தலா ₹ 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆசிரமத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக பாதிரியார் தாமசுக்கு மேலும் ஒரு வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.