தீவுக்கு பறந்த பிரபல நடிகைக்கு ஞாபகமெல்லாம் இதில்தான்..
தனுஷுடன் மாப்பிள்ளை, ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் போன்ற படங்களில் ஆரம்ப படங்களாக நடித்தார் நடிகை ஹன்சிகா. வந்த புதிதில் ஹன்சிகாவை சின்ன குஷ்பு என்று அழைத்தனர். தொடர்ந்து சேட்டை, தியா வேலை செய்யணும் குமாரு, மளமளவென படங்களில் நடித்ததுடன் விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம்2 மற்றும் 3, கார்த்தியுடன் பிரியாணி, பிரபுதேவாவுடன் குலேபகாவலி போன்ற படங்களில் நடித்தார். தற்போது 50வது படத்தை எட்டிப்பிடித்திருக்கிறார். இதற்கிடையில் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஹன்சிகா நடிக்கும் 50வது படமாக மஹா உருவாகிறது. இதில் நடித்துள்ள ஹன்சிகா சாமியார் உடை அணிந்து சுருட்டு புகைப்பதுபோல போஸ் அளித்த படம் வைரலானதுடன் சர்ச்சையிலும் சிக்கியது, ஹன்சிகா மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த சர்ச்சை அடங்கியது.
இப்படத்தை யூ. ஆர். ஜமீல் இயக்கி வருகிறார். ஸ்ரீகாந்த், சனம் ஷெட்டி, தம்பி ராமையா, கருணாகரன், சுஜித் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். கொரோனா ஊரடங்கில் இதன் பட வேலைகள் முடங்கி இருந்தன. ஹன்சிகாவும் வீட்டில் அடைபட்டு கிடந்தார். கொரோனா தளர்வில் பல நடிகைகள் சுற்றுலா பயணமாக மாலத்தீவு சென்றனர். காஜல் அகர்வால், சமந்தா, வேதிகா, பிரணிதா, டாப்ஸி, ரகுல் ப்ரீத் சிங், சோனாக்ஷி சின்ஹா என பலர் மாலத்தீவு சென்று விடுமுறை பயணத்தை கொண்டாடினார்கள். அவர்கள் எல்லோரும் அங்கிருந்து திரும்பிய நிலையில் நடிகை ஹன்சிகா சில தினங்களுக்கு முன் மாலத்தீவு விடுமுறை பயணம் புறப்பட்டார்.
அங்கு கொண்டாட்டத்தில் இருந்தாலும் ஞாபகமெல்லாம் அவர் நடித்து முடித்துள்ள 50 வது படம் மஹா மீதுதான் உள்ளது. மாலத்தீவிலிருந்து அவர் வெளியிட்ட மெசேஜில், மஹா படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் தொடங்கி நடப்பது பற்றி குறிப்பிட்டிருக்கிறார். 50வது படம் மஹா. இதுவொரு அற்புத பயணம். படக்குழுவினர், உடன் நடித்தவர்கள், தயாரிப்பாளர் எல்லோருமே இதயப்பூர்வமாக, ஆன்மாவை செலுத்தி இப்படத்தில் பணியாற்றினர். தற்போது போஸ்ட்புரடக்ஷன் பணி வேகமாக நடக்கிறது. படம் உருவாகி வரும் விதம் எனக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார் ஹன்சிகா. மஹா படம் தனக்கு தமிழில் பெரிய திருப்புமுனை தரும் என்று எதிர்பார்த்திருக்கும் ஹன்சிகா புதிய படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் மஹா ரிலீசுக்காக காத்திருக்கிறார்.