80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டு ஜனவரி 7க்கு வழக்கு ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோரும் மாற்றுத் திறனாளிகளும் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.இப்படிச் செய்தால் யாருக்கு ஒருவர் வாக்களிக்கிறார்கள் என்ற ரகசியத்தைக் காக்க முடியாது என்பது உள்ளிட்ட காரணங்களால் தபால் வாக்கு முறையை அறிமுகப்படுத்தக்கூடாது என தி.மு.க சார்பில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தி.மு.க சார்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. துரை என்ற 86 வயது முதியவர் ஒருவரும் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்திருந்தார். டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் தீபக் என்பவரும் இதே கோரிக்கைக்காக ஏற்கனவே ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார். தி.மு.க. தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பும் , தீபக் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
முதியவர் துரை தொடர்ந்த வழக்கு ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தங்கள் வழக்கையும் அதே தேதியில் ஒன்றாக விசாரிக்க வேண்டுமென தி.மு.க. சார்பில் கோரப்பட்டது. . இதையடுத்து தி.மு.க மற்றும் டிசம்பர் 3 இயக்கம் தொடர்ந்த வழக்குகள் ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அன்று ஒரே அமர்வில் இந்த மூன்று வழக்குகள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.