போதை பார்ட்டி நடத்திய கும்பல் கைது... கடைசி நிமிடத்தில் போலீசிடம் சிக்காமல் தப்பிய நடிகை, கணவர்...
போதை பார்ட்டியில் கலந்து கொண்ட மாடல் அழகி உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பிரபல மலையாள நடிகை மற்றும் அவரது கணவர் ஆகியோர் கடைசி நிமிடத்தில் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, வாகமண் உள்பட ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இந்நிலையில் வாகமன் பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் போதை பார்ட்டி நடப்பதாக மூணாறு உதவி போலீஸ் கமிஷனருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த சுற்றுலா விடுதியைச் சுற்றி வளைத்தனர். அதிரடியாக உள்ளே புகுந்து சோதனை நடத்தியதில் அங்குப் பிறந்தநாள் பார்ட்டி என்ற பெயரில் போதை விருந்து நடப்பது தெரியவந்தது. இதையடுத்து கொச்சியைச் சேர்ந்த மாடல் அழகியான பிரிஸ்டி பிஸ்வாஸ் மற்றும் அஜ்மல், இர்ஷாத் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து எம்டிஎம்ஏ, ஹாசிஷ், கஞ்சா உட்பட விலை உயர்ந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என போலீசார் கூறினர்.இக்கும்பல் பிறந்தநாள் பார்ட்டி நடத்துவதாகக் கூறி அந்த சொகுசு விடுதியில் உள்ள அறைகள் அனைத்தையும் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் போதைப் பொருளை விற்பனை செய்வதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த விடுதி உடனடியாக சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த போதை பார்ட்டியில் பிரபல மலையாள நடிகையும், அவரது கணவரும் ( இவர் மலையாள சினிமாவில் பிரபல டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்) இதில் கலந்துகொள்ளத் தீர்மானித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் அவர்கள் அங்கு செல்வதற்கு முன்பாக போலீசார் சோதனை நடத்தி அனைவரையும் கைது செய்தனர். போலீசார் வருவதற்கு முன்பாக இவர்கள் சென்றிருந்தால் அவர்களும் கைது செய்யப்பட்டு இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.