லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்: அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவு
லாரிகளுக்கான வேகக் கட்டுப்பாட்டுக் கருவி ஜிபிஎஸ் கருவி, வேகக்கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் ஒளிரும் பட்டைகளை ஒரு சில குறிப்பிட நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று தமிழக அரசு எங்களைக் கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் செலவாகும். இதைத் தளர்த்தக் கோரி பல முறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரிடம் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வரும் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் சம்பந்தமாகத் தமிழக போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவகர் லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகளுடன் இன்று சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 9 கோரிக்கைகளில் 6 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது. மற்ற 3 கோரிக்கைகள் சம்பந்தமாகப் பரிசீலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே 27 ஆம் தேதி முதல் தொடங்க இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் விலக்கிக்கொள்ளப்படுகிறது. லாரிகள் வழக்கம்போல் இயங்கும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் மற்றும் செயலாளர் தெரிவித்துள்ளார்.