தமிழகத்தில் எஸ்.ஐ. தேர்வு: உத்தேச பட்டியலுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு, தாக்கல் செய்திருந்தார்.நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்.10 மற்றும் 12ஆம் வகுப்பு , பட்ட படிப்பு தமிழ் வழியில் படித்து உள்ளேன்.தமிழகக் காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்காகக் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.இதற்கு நான் முறையாக விண்ணப்பித்து. கடந்த ஜனவரி மாதம் நடந்த எழுத்துத் தேர்வில் பங்கேற்றேன். இதில் நான் 70க்கு 51 மதிப்பெண்கள் பெற்றேன்.

இதைத்தொடர்ந்து நடந்த உடல் திறன் தேர்வில் 15 மதிப்பெண்களுக்கு 12 மதிப்பெண்கள் பெற்றேன் .இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி பொதுப் பிரிவினரில் தேர்வு செய்யப்பட்டவர்களின் உத்தேச பட்டியல் வெளியானது.ஆனால் பிரிவு வாரியாக கட் ஆப் மார்க் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. நேர்முகத்தேர்வுக்கும் என்னை அழைக்கவில்லை.

எம்.பி.சி பிரிவிற்கு 64 கட் ஆப் மார்க் ஆக உள்ளது. நான் 63 மதிப்பெண் பெற்றுள்ளேன். தமிழ் வழியில் படிப்புக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் என்னை அழைத்திருந்தால் நேர்முகத்தேர்வுக்குச் சென்றிருப்பேன் . அவ்வாறு என்னை அழைக்கவில்லை .தமிழ் வழியில் படித்ததற்கான ஒதுக்கீடு முறைப்படி செயல்படுத்தப்படவில்லை.எனவே தமிழ் வழி படித்தோருக்கு ஒதுக்கீடு அடிப்படையில் முறைப்படி தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும். அதுவரை கடந்த 1ம் தேதி வெளியிட்ட. உத்தேச தேர்வு பட்டியலுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு தமிழ்வழி படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுவதில் ஏன் இந்த முரண்பாடு? . தமிழ் வழியில் படித்தவர்கள் தமிழகத்தில்தான் வேலைக்குச் செல்ல முடியும். ஏன் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க மறுக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான உத்தேச தேர்வு பட்டியலுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.மேலும் தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

More News >>