சட்டசபையை கூட்ட சட்டப்படி அனுமதி கேட்கவில்லை... முதல்வருக்கு கவர்னர் பதில்
சிறப்புச் சட்டசபையைக் கூட்ட சட்டப்படி தன்னிடம் அனுமதி கேட்கவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இதையடுத்து கேரள அரசுக்கும், மாநில கவர்னருக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இன்று சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் சட்டசபை கூட்டத்திற்கு அனுமதி கோரி கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டது. வழக்கமாக அமைச்சரவை கூடி எடுக்கும் முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பது தான் மரபாகும். இதன்படி சட்டசபை கூட்டத்திற்கு கவர்னர் அனுமதி அளிப்பார் என்று கருதப்பட்டது.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இந்த சிறப்புச் சட்டசபை கூட்டத்திற்கு கவர்னர் ஆரிப் முகம்மது கான் அனுமதி மறுத்தார். ஜனவரி 8ம் தேதி வழக்கமான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் தற்போது சட்டசபையைக் கூட்ட என்ன அவசர தேவை உள்ளது என்று கேட்டு கவர்னர், கேரள அரசுக்குக் கடிதம் அனுப்பினார்.சிறப்புச் சட்டசபை கூட்டத்திற்கு கவர்னர் அனுமதி மறுத்தது கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னரின் நடவடிக்கைக்குக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசியல் சாசன சட்டத்தை கவர்னர் மீறிவிட்டார் என்று இக்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் கவர்னருக்கு கண்டனம் தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உடனடியாக ஒரு கடிதம் எழுதினார். அதில், கவர்னரின் நடவடிக்கை அரசியல் சாசன சட்டம் 174 (1) படி தவறாகும். சபையைக் கூட்டுவதற்கும், கூட்டத் தொடரை நிறுத்துவதற்கும் கவர்னருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
ஜனாதிபதியும், கவர்னரும் அமைச்சரவையின் அறிவுரையின் படி தான் செயல்பட வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. சட்டசபையில் பெரும்பான்மை உள்ள அரசு, சட்டசபையைக் கூட்டவோ, நிறுத்தவோ சிபாரிசு செய்தால் அதற்கு அனுமதி அளிக்க வேண்டியது கவர்னரின் கடமையாகும். அதை நிராகரிக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு கவர்னர் ஆரிப் முகம்மது கான், கேரள அரசுக்குப் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறப்புச் சட்டசபையைக் கூட்ட சட்டப்படி அனுமதி பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கேரளாவில் அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.