இங்கிலாந்திலிருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா.. கொரோனா 2.0 வந்துவிடுமோ?!
இங்கிலாந்து நாட்டில் இருந்து தலைநகர் டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி தலைகீழாக புரட்டி போட்டது. இருப்பினும், தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியை இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மேற்கொண்டு வருகிறது. இதில், சில தடுப்பூசிகள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் அவசர கால பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதற்கிடையே, வீரியம் அதிகம் கொண்ட கொரோனா வைரஸ் பிரிட்டனில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த அந்த நாட்டில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளது. இதேபோன்று, இந்தியாவிலும் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது, இங்கிலாந்தில் இருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் வந்த 6 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 6 பேரும் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 45-க்கும் மேற்பட்ட பயணிகளை முகாம்களில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா உறுதிசெய்யப்பட்ட பயணிகளின் ரத்த மாதிரிகளில் தற்போது உருமாறியிருக்கும் புதிய கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய, அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, நேற்று இங்கிலாந்திலிருந்து டெல்லி, கொல்கத்தா, அகமாதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு வந்த 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா பரவி வரும் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களால் மீண்டும் கொரோனா 2.0 வந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.