பலுசிஸ்தான் சமூக ஆர்வலர் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை: கனடா காவல்துறை விளக்கம்!
கனடா: பலுசிஸ்தான் சமூக ஆர்வலர் கரீமா பலூச் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என கனடா காவல்துறை திட்டவட்டம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் அடக்குமுறைகளுக்கு எதிராக பலுசிஸ்தான் தலைவர்கள் பலர் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தானிடமிருந்து தங்களுக்குச் சுதந்திரம் வேண்டும் என பிரிவினைவாதிகள் பலரும் அவ்வப்போது தாக்குதலிலும் ஈடுபடுகின்றனர்.
இதற்கிடையே, பலுசிஸ்தான் சமூக ஆர்வலரான கரீமா பலூச் என்பவர் பாகிஸ்தான் ஈடுபடும் ஆக்கிரமிப்புகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச அளவில் குரல் கொடுத்து வந்தார். இதன் காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு பிபிசி நிறுவனம் வெளியிட்ட சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலிலும் கரீமா பலூச் இடம் பிடித்தார். நாட்டிற்கு எதிராக குரல் கொடுப்பதால் தனது ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதி பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய சமிரா பலூச் கனடா நாட்டிற்கு குடியேறினார்.இந்நிலையில், கடந்த 21-ம் தேதி கனடா டொராண்டோ டவுன்டவுன் நீர்முனைக்கு அருகே கரீமாவின் உடல் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில நாட்களுக்கு முன் காணாமல்போன நிலையில், கரீமா பலூச் மரணம் அடைந்தது பல்வேறு தரப்பினர் மத்தியில் சந்தேசகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கனடா காவல்துறை கூறுகையில், கரீமா பலூச் மரணத்தின் பின்னணியை அறிய அனைவரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். கடந்த 21-ம் தேதி கரீமா உயிரிழந்துள்ளார். விசாரணையில் கரீமாவின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. எந்த குற்றச் சம்பமும் நடைபெறவில்லை" என்று தெரிவித்துள்ளனர்.