பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் நிபந்தனை.. டெல்லியில் 29வது நாளாக போராட்டம்..
மத்திய அரசு உறுதியான திட்டத்துடன் வந்தால்தான், பேச்சுவார்த்தைக்குச் செல்வோம் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.24) 29வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் லாபம் என்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோரும், தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர். ஆனால், சட்டங்களை ரத்து செய்ய முடியாது. அதேசமயம், விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை(எம்.எஸ்.பி) உறுதி செய்யும் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு கூறியது. அந்த திட்டத்தையும் விவசாயிகள் போராட்டக் கூட்டு நடவடிக்கை குழு நிராகரித்து விட்டது.
இந்நிலையில், டெல்லி சிங்கு எல்லையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து முகாமிட்டுப் போராடி வருகின்றனர். இதே போல், டெல்லி-ஹரியானா சாலைகளில் மற்ற எல்லைகளிலும் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையே, மத்திய வேளாண் அமைச்சர் தோமர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இது பற்றி, பல்வேறு விவசாயச் சங்கங்களின் தலைவர்கள் சுமார் 100 பேர் நேற்று(டிச.23) கூடி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.அதன்பின்னர் அவர்கள் கூறுகையில், மத்திய அரசு ஒரு உறுதியான திட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால்தான் நாங்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்வோம்.
விவசாயிகளின் விளைபொருட்களுக்குக் குறிப்பிட்ட சதவீத விலைகளை நிர்ணயிக்கும் வகையில் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும். வெறும் வாக்குறுதிகள் மட்டுமே பலனளிக்காது என்று தெரிவித்தனர்.தற்போது, விவசாயிகளின் போராட்டத்தால் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ளன.