18 காங்கிரஸ் கவுன்சிலர்கள் பவார் கட்சியில் சேர்ந்தனர்.. மெகா கூட்டணியில் சிக்கல்?

மகாராஷ்டிராவில் பிவான்டி நிஜாம்பூர் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் 18 பேர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இரு கட்சிகளுக்கும் மோதல் ஏற்பட்டு, பிரிந்தன.இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியை(என்சிபி) உடைத்து மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயன்றது. அந்த முயற்சி தோற்றுப் போனது. பின்னர், காங்கிரஸ்-என்சிபி கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைத்தது.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார். இதன்பிறகு, சிவசேனாவுக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்தியாவில் இதற்கு முன் ஏற்படாத ஒரு கூட்டணி ஆட்சியை உத்தவ் தாக்கரே வெற்றிகரமாக நடத்தி ஓராண்டு முடித்துள்ளார்.இதற்கிடையே, கூட்டணிக்குள் காங்கிரஸ் மற்றும் சிவசேனாவுக்கு இடையே அவ்வப்போது சிறுசிறு மோதல்கள் ஏற்பட்டு அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. இந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து பலரும் விலகி சரத்பவாரின் என்.சி.பி. கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.

பிவான்டி நிஜாம்பூர் மாநகராட்சியின் துணை மேயர் இம்ரான் அலி முகமதுகான் உள்பட 18 காங்கிரஸ் கவுன்சிலர்கள் நேற்று(டிச.23) என்.சி.பி. கட்சியில் சேர்ந்தனர். துணை முதல்வர் அஜித்பவார், என்.சி.பி. மாநில தலைவர் ஜெயந்த் பாடீல் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் இணைந்தனர். இதனால், காங்கிரஸ் அமைச்சர்களும், மூத்த தலைவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, காங்கிரசுக்கும், என்.சி.பி. கட்சிக்கும் இடையே மோதல் ஏற்படுமா? அதனால் ஆளும் மெகா கூட்டணியில் குழப்பம் ஏற்படுமா என்று மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

More News >>