1 ரூபாய்க்கு மதிய சாப்பாடு டெல்லியில் ஜன் ரசோய் கேன்டீன் தொடங்கினார் பாஜக எம்பி கவுதம் கம்பீர்
ஏழை, எளியவர்கள் பயன்படும் வகையில் டெல்லியில் தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாஜக எம்பி கவுதம் கம்பீர் 1 ரூபாய்க்கு மதிய சாப்பாடு கொடுக்கும் திட்டத்தை இன்று தொடங்கினார்.இந்தியாவிலேயே முதன் முதலாக உணவின்றி வாடும் ஏழைகள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகம் என்ற திட்டத்தைத் தமிழகத்தில் தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். மிகக் குறைந்த விலையில் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் இங்கு உணவு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் வெற்றி பெற்ற இந்தத் திட்டம் பின்னர் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கிழக்கு டெல்லி தொகுதி பாஜக எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீரும் இந்த திட்டத்தைத் தனது தொகுதியில் அமல்படுத்தத் தீர்மானித்தார். 1 ரூபாய்க்குச் சாப்பாடு வழங்கும் ஜன் ரசோய் என்ற பெயரில் கேன்டீன்களை தொடங்க இவர் திட்டமிட்டார். இந்நிலையில் கிழக்கு டெல்லியிலுள்ள காந்தி நகரில் ஜன் ரசோயின் முதல் கேன்டீனை இன்று அவர் தொடங்கி வைத்தார்.
குடியரசு தினத்தன்று டெல்லியில் உள்ள அசோக் நகரில் ஜன் ரசோயின் இரண்டாவது கேன்டீன் தொடங்கப்பட உள்ளது. தன்னுடைய கிழக்கு டெல்லி தொகுதிக்கு உட்பட்ட 10 சட்டசபை தொகுதிகளிலும் தலா ஒரு கேன்டீனை தொடங்க திட்டமிட்டுள்ளதாகக் கவுதம் கம்பீர் கூறினார். பல நவீன வசதிகளுடன் இந்த கேன்டீன்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சாப்பிட வசதி உள்ளது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தற்போது ஒரே நேரத்தில் 50 பேருக்கு மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்படும். அரசின் உதவி இல்லாமல் தன்னுடைய அறக்கட்டளை மூலம் இந்த கேன்டீன்களை நடத்தக் கவுதம் காம்பீர் திட்டமிட்டுள்ளார்.