சபரிமலையில் 5,000 பக்தர்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு... கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது. கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் பக்தர்கள் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று கேரள அரசு கூறியுள்ளது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் இவ்வருட மண்டல பூஜைக்கு இன்னும் 2 தினங்கள் மட்டுமே உள்ளன. வரும் 26-ம் தேதி (நாளை மறுநாள்) பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்று இரவு கோவில் நடை சாத்தப்படும்.
பின்னர் மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை மட்டுமே நடை திறக்கப்படும். இந்நிலையில் இவ்வருடம் கொரோனா பரவல் காரணமாக மண்டலக் கால பூஜைக்கு நடை திறந்த போது வார நாட்களில் 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பக்தர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்ததைத் தொடர்ந்து வார நாட்களில் 2,000 பேரும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 3,000 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கடந்த வாரம் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 20ம் தேதி முதல் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால் சபரிமலையில் போலீசார், கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கையைக் கூட்டக் கேரள அரசு முதலில் மறுத்தது.ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கு முன் கேரள தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கக் கேரள அரசு முன்வராமல் இருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் பக்தர்கள் எண்ணிக்கையைக் கேரள அரசு அதிகரிக்க மறுப்பதால் கேரள அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் பக்தர்கள் எண்ணிக்கை 5,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது. சபரிமலையில் தற்போது கொரோனா பரவல் பெருமளவு அதிகரித்து வருகிறது. எனவே இந்த சூழ்நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை கூடும்போது நோய் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதனால் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கேரள அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.