ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் என குறிப்பிடவில்லை - உச்சநீதிமன்றம்
ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் என நாங்கள் தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் 6 வாரங்களுக்குள் காவிரி பங்கீடு தொடர்பாக ஸ்கீம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
நீதிமன்றத்தின் 6 வாரகால அவகாசம் முடிந்த பிறகு மத்திய அரசு ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டும், கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் 3 மாத கால அவகாசம் கேட்டும் நீதிமன்றத்தில் மனு செய்தது. தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்த வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலையில் நடைபெற்றது. ’மாதந்தோறும் காவிரியில் இருந்து எவ்வளவு நீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டுமோ அந்த நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும். மேலாண்மை வாரியம் என காவிரி நடுவர் மன்றம் தெரிவித்திருந்தாலும் எங்கள் தீர்ப்பில் செயல்திட்டம் என குறிப்பிட்டுள்ளோம்.
வரும் மே 3ஆம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு திட்டம் தாக்கல் செய்ய வேண்டும். ஸ்கீம் குறித்து வரைவு அறிக்கைக்குப் பின்னர் முடிவு எடுக்கப்படும். ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் என நாங்கள் தீர்ப்பில் குறிப்பிடவில்லை. காவிரி தீர்ப்பை அமல்படுத்தும் வரை தமிழகம், கர்நாடகாவில் அமைதி நிலவ இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு தன் வரைவு செயல்திட்டத்தை சமர்ப்பித்த பின் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் கருத்துகள் கேட்கப்பட்டு செயல் திட்டம் இறுதி செய்யப்படும். நாங்களே அனைத்து அம்சங்களும் வழங்கியுளோம். பின்னர் ஏன் விளக்கம் கேட்டு நீங்கள் வந்து இருக்கிறீர்கள். சந்தேகம் என்றால் மார்ச் 31 க்கு முன்னர் ஏன் விளக்கம் கேட்கவில்லை” என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தவழக்கு மீண்டும் வரும் மே 3ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் காவிரி இறுதித்தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கை என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com