மாணவர்கள் செல்போன் வாங்க ரூ.10,000... மம்தா பானர்ஜி அதிரடி!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு செல்போன் வாங்க ரூ.10,000 வழங்கப்படும் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 3-வது முறையாக ஆட்சியை தக்கவைக்க மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த டிசம்பர் 3-ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செல்போன் மற்றும் டேப்லெட் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. இருப்பினும், குறைந்த காலத்தில் அரசு அளித்த தொகைக்கு 9.5 லட்சம் சாதனங்கள் உற்பத்தி செய்து வழங்க முடியாது என்று செல்போன் நிறுவனங்கள் மறுத்து விட்டது. சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று நினைத்த முதல்வர் மம்தாவிற்கு புதிய யோசனை தோன்றியுள்ளது.

இதன்படி, 12-ம் வகுப்பு மாணவர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 பணம் மாணவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா கூறுகையில், அரசு சார்பில் டெண்டர் விதத்தில் 1.5 லட்சம் சாதனங்கள் மட்டுமே கிடைக்கும் என அறிந்து கொண்டோம். இதற்கிடையே, சீனா தயாரிப்புகளை வாங்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால், இந்த யோசனை வந்தது. அடுத்த மூன்று வார காலத்திற்குள் செல்போன் வாங்குவதற்கான தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

More News >>