இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவியதா? நாக்பூரில் பீதி
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவியதாக சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் லண்டனில் இருந்து வந்த ஒரு வாலிபருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் உருமாறிய புதியவகை வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே பரவிவரும் கொரோனா வைரசை விட இது 70 சதவீதம் வேகத்தில் பரவி வருவதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகள் ரத்து செய்து விட்டன. இங்கிலாந்தில் லண்டன் உட்பட சில பகுதிகளில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரசால் இதுவரை அதிகமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், இந்த வைரஸ் வேகமாக பரவுவது பல்வேறு நாடுகளில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களில் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த பயணிகளுக்கு நோய் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டது இந்தியாவிலும் இந்த புதிய வகை வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களில் இந்தியா வந்த 22 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்தோ அல்லது இங்கிலாந்து வழியாகவோ டெல்லி வந்த 11 பேர், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு வந்த 8 பேர், கொல்கத்தாவுக்கு வந்த 2 பேர் மற்றும் சென்னைக்கு வந்த ஒருவர் உட்பட 22 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து நாக்பூர் வந்த ஒருவருக்கு கொரோனா பரவியது உறுதி செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 29ம் தேதி இவர் லண்டனில் இருந்து நாக்பூர் வந்தார். விமான நிலையத்தில் வைத்து இவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு கடுமையான காய்ச்சல் உள்பட நோய் அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா நெகட்டிவ் என தெரியவந்து 7 நாட்களுக்குப் பின்னர் தான் அவருக்கு நோய் அறிகுறிகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அந்த நபர் உடனடியாக நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உமிழ்நீர் மாதிரி பூனாவில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனையில் அவருக்கு பரவியிருப்பது புதிய வகை வைரசா என்பது தெரியவரும். இதற்கிடையே அந்த நபரின் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டனர்.