3 மாதங்களில் பாப்புலர் பிரண்ட் வங்கிக் கணக்குகளில் ₹ 100 கோடி முதலீடு மத்திய அமலாக்கத் துறை அதிர்ச்சி தகவல்

3 மாதங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் வங்கிக் கணக்குகளில் ₹ 100 கோடி முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த முதலீட்டை செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் மத்திய அமலாக்கத் துறை எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ரவூப் செரீப். இவர் பாப்புலர் பிரண்டின் மாணவர் அமைப்பான கேம்பஸ் பிரண்ட் என்ற அமைப்பின் தேசிய பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். அரபு நாட்டில் பணிபுரிந்து வந்த இவர், சமீபத்தில் ஊர் திரும்பியிருந்தார். இந்நிலையில் இவரது 3 வங்கி கணக்குகளில் அளவுக்கு அதிகமாக பணம் முதலீடு செய்யப்பட்டு வருவது மத்திய அமலாக்கத் துறையின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து அவரது நடவடிக்கைகளை மத்திய அமலாக்கத் துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ரவூப் செரீப் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து பிடிபட்டார். இதையடுத்து அவரை மத்திய அமலாக்கத் துறை கைது செய்து விசாரித்தது. இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பின்னர் இவரை அமலாக்கத் துறையினர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அமலாக்கத் துறை சார்பில் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பது: பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு பல வங்கிகளில் கணக்குகள் உள்ளன. இந்நிலையில் இந்த வங்கி கணக்குகளில் கடந்த 2019 டிசம்பர் முதல் 2020 பிப்ரவரி வரை ₹ 100 கோடிக்கு மேல் பணம் வந்துள்ளது.

இந்தப் பணம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அப்துல் ரவூப்பின் வங்கிக் கணக்கிலும் கோடிக்கணக்கில் பணம் வந்துள்ளது. சமீபத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராசுக்கு செல்ல முயன்றபோது பிடிபட்ட கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்தீக் காப்பன் உட்பட சிலருக்கு ரவூப் லட்சக்கணக்கில் கொடுத்துள்ளார். பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு யார், எந்தெந்த நாடுகளில் இருந்து பணம் அனுப்பப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>