டெல்லியில் 30வது நாளாக விவசாயிகள் போராட்டம்.. காலிஸ்தான் உதவி வருகிறதா?
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவசமாகப் பொருட்களை வழங்குவதற்கு கிஷான் மால் என்ற கடையைத் தனியார் தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதில் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தொடர்பு உள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.25) 30வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் லாபம் என்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோரும், தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர். ஆனால், சட்டங்களை ரத்து செய்ய முடியாது. அதேசமயம், விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை(எம்.எஸ்.பி) உறுதி செய்யும் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
இந்நிலையில், டெல்லி சிங்கு எல்லையிலும், திக்ரி எல்லையிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து முகாமிட்டுப் போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு அன்றாடத் தேவைகளை பல்வேறு சமூக சேவை நிறுவனங்கள் இலவசமாக அளிக்கின்றன. மேலும், சீக்கியர் இனத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உள்படப் பிரபலங்கள் பலரும் உதவி வருகின்றனர். இதற்கிடையே, போராடும் விவசாயிகளுக்குத் தேவையான சோப்பு, எண்ணெய் மற்றும் மளிகைச் சாமான்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்குவதற்காக திக்ரி எல்லையில் கிஷான் மால் என்ற பெயரில் ஒரு ஸ்டோரை கல்சா எய்டு இன்டர்நேஷனல் அமைப்பு திறந்துள்ளது. இந்த ஸ்டோர்ஸ் மேலாளர் குருசரண் கூறுகையில், இங்கு விவசாயிகளுக்குத் தேவையான பொருட்களை வழங்குகிறோம். முன்கூட்டியே டோக்கன் கொடுத்து அவற்றை விநியோகித்து வருகிறோம் என்றார்.
சீக்கிய தீவிரவாத இயக்கமான காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்த கல்சா எய்டு இன்டர்நேஷனல் மூலம் போராடும் விவசாயிகளுக்கு இலவச உதவிகளை வழங்கி போராட்டத்தை ஊக்குவித்து வருகின்றனர் என்று சில மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து கல்சா எய்டு இன்டர்நேஷனல் அமைப்பு ஒரு விளக்கம் அளித்துள்ளது.அதில், எங்கள் அமைப்பு உதவி தேவைப்படும் அனைவருக்குமே சாதி, மத, இனவேறுபாடு இல்லாமல் சேவை ஆற்றி வருகிறது. பூகம்பம், மழைவெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களிலும் நாங்கள் பல இடங்களில் உதவியிருக்கிறோம். ஆனால், சில மீடியாக்கள் எங்களிடம் கருத்துக் கேட்காமலேயே பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிடுகின்றன என்று தெரிவித்துள்ளது.