கூகுள், மைக்ரோசாஃப்ட் போல் புதிதாக வருகிறது ஒரு இ-மெயில்
வீடியோ அழைப்பு என்னும் மெய்நிகர் சந்திப்பு சந்தையில் தன் நிலையை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் மின்னஞ்சல் சேவையை ஆரம்பிக்க ஸூம் (Zoom) நிறுவனம் முயற்சித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் இணையவழி வகுப்புகளை நடத்த ஆரம்பித்தன. வீட்டிலிருந்து வேலை (WFH) செய்யும் பணியாளர்களை நிறுவனங்கள் வீடியோ அழைப்பு மூலம் ஒருங்கிணைத்தன. பல்வேறு சமுதாய கூட்டங்கள் நடத்த இயலாத நிலையில் மெய்நிகர் சந்திப்புகள் நடத்தப்பட்டன.
இந்த சமயத்தில் Zoom செயலி மிகப்பெரிய அளவில் புதிய பயனர்களைப் பெற்றது. தொலைதூர வேலை மற்றும் கற்றல் காரணமாக எதிர்பாராத வண்ணம் Zoom நிறுவனத்தின் பங்குகள் 500 சதவீதம் உயர்ந்தன. தற்போது மின்னஞ்சல் (email) மற்றும் காலண்டர் செயலி ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதில் ஸூம் நிறுவனம் தீவிரமாக இயங்கி வருகிறது.
ஆபீஸ் 365 தளம் மற்றும் கூகுளின் ஒர்க்ஸ்பேஸ் மென்பொருள்களை போன்று ஸூம் நிறுவனத்தின் வீடியோ அழைப்பு செயலி பெரிய அளவில் பயனர் வட்டத்தை பெற்றிருப்பதால் அந்நிறுவனங்களைப் போல மின்னஞ்சல் சேவையைத் தொடங்க ஸூம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. Zoom மின்னஞ்சல் மற்றும் காலண்டர் அடுத்த ஆண்டில் பயன்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.