ரஜினி கட்சியில் இணைகிறார் லாரன்ஸ்?
நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா என திகில் படங்களை இயக்கியும் நடித்து அசத்தினார். இவர் இயக்கிய காஞ்சனா படம் இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் ரிமேக் ஆனது.அப்படத்தையும் லாரன்ஸே இயக்கினார். ஒடிடியில் இப்படம் லஷ்மி என்ற பெயர் மாற்றத்துடன் வெளியானது. இதில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடித்தனர். ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி 2ம் பாகத்தை பி.வாசு இயக்குகிறார். இப்படத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.
இதன் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. படம் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்ற மாதம் ருத்ரன் என்ற படத்தில் லாரன்ஸ் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். ஆனால் படத்தை இயக்குவது யார் என்று அப்போது அறிவிப்பு வெளியாகவில்லை. அந்த படத்தைத் தயாரிப்பாளர் கதிரேசனே இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இவர் ஏற்கனவே தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களையும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா போன்ற படங்களை தயாரித்திருக்கிறார். மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தைத் தமிழ் ரீ மேக் உரிமையை கதிரேசன் வாங்கி உள்ளார். இப்படத்தில் சசிகுமார் நடிக்கிறார். லாரன்ஸ் சினிமாவில் கவனம் செலுத்தும் நிலையில் அடுத்த கட்டமாக அவரது குருவான ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதால் அதில் அவருடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனிக்கட்சி தொடங்க உள்ளதாக ரஜினி அறிவித்தவுடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய லாரன்ஸ் அவருக்கு வாழ்த்து பகிர்ந்திருந்தார்.
ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் ரஜினியைப் பற்றி யாராவது விமர்சனம் செய்தால் அவர்களுக்கு பதிலடியும் தந்து வருகிறார். வரும் 31ம் தேதி புதிய கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்க உள்ளதாக ரஜினி தெரிவித்திருக்கிறார். அவர் கட்சி தொடங்கியதும் அந்த கட்சியில் லாரன்ஸ் இணைவார் என்றும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.