நடிகர் சங்கத்தின் தலைவர் தமிழரா? - பாரதிராஜாவுக்கு ஜெயக்குமார் கேள்வி
நடிகர் சங்கத்தின் தலைவராக தற்போது யார் உள்ளார்? அவர் தமிழகத்தை சேர்ந்தவரா? பாரதிராஜா பதில் சொல்வாரா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா என்பவரை புதிய துணை வேந்தராக நியமிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல் பல்வேறு கல்வியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுதொடர்பாக பலர் கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழக மக்களும், விவசாயிகளும் போராடி வருகின்ற நிலையில், கர்நாடகாவை சேர்ந்த ஒருவரையே துணை வேந்தராக நியமிக்கப்பட்டிடுப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்திருந்த பாரதிராஜா, “இசைப் பல்கலைக்கழகத்திற்கும், சட்ட பல்கலைக்கழகத்திற்கும் யார் துணைவேந்தர்களை நியமனம் செய்தது. தமிழக அரசின் கவனத்திற்கு போகாமல் இந்த நியமனம் நடந்திருக்காது. வெளிமாநிலத்தவரை யார் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டார்கள் என்பதை விளக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது” என்று தெரிவித்து இருந்தார். மேலும், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கியிருப்பதாக இயக்குநர் பாரதிராஜா அறிவித்தார்.
இந்நிலையில் பாரதிராஜாவின் கருத்துக்கு பதிலளித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ”தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவைக்கு வாழ்த்துக்கள் கூறினார். தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை அரசு மீது புழுதி வாரித் தூற்றக் கூடாது. குறுகிய கண்ணோட்டத்துடன் எங்கள் மீது பழி சுமத்துவது அபத்தமானது.
இசைக் கல்லூரிக்கான துணை வேந்தர் தேர்வு செய்யப்பட்டது, தேர்வு தகுதியின் அடைப்படையிலேயே நடைபெற்றது. தேர்வுக்குழு பரிந்துரையின் பேரிலேயே நியமனம் நடந்தது என்றும் இதில் விதி மீறல் இல்லை; முறைப்படி செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், பேசிய அவர், “தமிழ்த் திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவராக தற்போது யார் உள்ளார்? அதற்கு பாரதிராஜா பதில் சொல்வாரா? அவர் தமிழகத்தை சேர்ந்தவரா? உங்கள் மீது குற்றம் வைத்துக் கொண்டு அடுத்தவர் மீது குற்றம் கூறக் கூடாது” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com