விஜய் சேதுபதிக்கு பதிலாக வில்லன் ஆகும் நடிகர்...!
நடிகர் விஜய் சேதுபதி தமிழில் ஹீரோவாக நடித்து வந்தாலும் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார். அடுத்த விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடிக்கிறார். தவிர தெலுங்கில் சிரஞ்சீவி படமொன்றில் வில்லனாக வேடம் ஏற்றார். இந்தியில் அமீர்கான் படத்தில் வில்லனாக நடிப்பதாக இருந்தது கொரோனா ஊரடங்கு குளறு படியால் ஏற்பட்ட கால்ஷீட் குழப்பத்தில் அந்த படத்திலிருந்து விலகினார். இதற்கிடையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் புதிய படம் புஷ்பா மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இப்படம் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கின்றனர். ஆந்திர காடுகளில் நடக்கும் செம்மரக் கட்டை திருட்டு பற்றிய கதையாக இது உருவாக உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி காட்டிலாக அதிகாரியாக வில்லன் வேடத்தில் நடிக்க விருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி விட்டார். அவருக்குப் பதிலாக மற்றொரு தமிழ் நடிகரை வில்லனாக நடிக்க வைக்க ஆலோசித்து வந்தனர். தற்போது ஆர்யா நடிப்பார் என்று கூறப்படுகிறது.
ஆர்யா தமிழில் டெடி, சார்பட்டா பரம்பரை. எனிமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் ஆர்யாவை நடிக்க வைக்கப் பேச்சு நடக்கிறது. எல்லா மொழியிலும் இப்படம் வெளியாவதால் கன்னடத்திலிருந்து தனஞ்செயா, தெலுங்கிலிருந்து சுனில் ஆகியோரும் வில்லன்களாக நடிக்க உள்ளார்களாம். கொரோனா ஊரடங்கிற்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது, ஊரடங்கு அமலானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியபிறகு புஷ்பா படப் பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் படப் பிடிப்பில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் படப்பிடிப்பு தடைப்பட்டது. அதன்பிறகு மீண்டும் படப் பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. புஷ்பா படத்திற்காக பெரிய பரபரப்பளவில் காட்டுப்பகுதி அரங்கம் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.