மோடியே தடை போட்டாலும் கிராமசபை கூட்டம் நடக்கும்.. மரக்காணத்தில் ஸ்டாலின் பேச்சு..

பிரதமர் மோடியே வந்து தடை விதித்தாலும் திமுகவின் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டன. திமுகவின் சார்பில் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமசபைக் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கிராமசபை கூட்டங்களை எந்த அரசியல் கட்சியும் நடத்தக் கூடாது என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து, மக்கள் கிராம சபை என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி பகுதியில் தி.மு.க. சார்பில் கிராமசபைக் கூட்டத்தை இன்று காலை நடத்தினர். இதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கார் மூலம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்துக்கு காலை 10 மணிக்கு வந்தார்.

தொடர்ந்து, கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இந்த பகுதிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம். நான் நடத்திய கிராம சபைக் கூட்டத்திற்கு மக்கள் பெருமளவில் திரண்டு ஆதரவு அளித்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், கிராம சபைக் கூட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தடை விதித்துள்ளார். எந்த தடை விதித்தாலும் கிராம சபைக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவோம். பிரதமர் மோடியே வந்து தடை போட்டாலும் கிராமசபைக் கூட்டங்களை நடத்துவோம். திமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறது. இன்னும் 4 மாதத்தில் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என்று மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். இப்போதே திமுக தான் ஆட்சியில் இருப்பது போல் மக்கள் எங்களிடம் குறைகளைக் கூறி வருகிறார்கள்.

கடந்த 2 நாட்களில் கிராமசபைக் கூட்டங்களின் மூலம் 50 லட்சம் பேர் திமுகவில் இணைந்துள்ளனர். 5 கோடி பேர் இணையவழியில் சேர்ந்துள்ளனர். நாட்டின் நெருக்கடிக் காலத்தில் ஜனநாயகத்திற்காகக் கருணாநிதி குரல் கொடுத்ததைப் போல், இன்று தற்போதைய நெருக்கடியான நேரத்தில் நான் குரல் கொடுத்து வருகிறேன். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை கவர்னரிடம் அளித்துள்ளோம். ஆட்சி மாறப் போகிறது என்பது அவருக்கும் தெரிகிறது. அவர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். அப்படி அவர் விசாரிக்காவிட்டால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விசாரித்து நடவடிக்கை எடுப்போம். எங்களை குடும்பக் கட்சி என்று விமர்சிக்கிறார்கள்.

நான் 13 வயதிலேயே கட்சிக்காக உழைத்து இன்று தலைவராகி இருக்கிறேன். குடும்ப அரசியல் கட்சியாக இருப்பது தவறில்லை. எடப்பாடி பழனிசாமி போல் ஊழல் குடும்பக் கட்சியாக இருக்கக் கூடாது.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.தி.மு.க. இணை பொதுச்செயலாளர் பொன்முடி, விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

More News >>