பிரபல நடிகர் அணையில் மூழ்கி பலி...!
பிரபல மலையாள சினிமா நடிகர் அனில் நெடுமங்காடு (48) அணையில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். படப்பிடிப்பை முடித்த பின் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.கடந்த சில வருடங்களாக மலையாள சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் அனில். இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு என்ற இடத்தை சேர்ந்தவர். நாடக நடிகரான இவர், சுமார் 20 வருடங்களுக்கு முன் ஒரு பிரபல மலையாள தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார்.
இதன் பின்னர் மலையாள சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். கடந்த சில வருடங்களாக இவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக மாறியுள்ளன. பிரித்விராஜ், பிஜு மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய ஐயப்பனும் கோஷியும் என்ற படத்தில் இவர் நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் பரபரப்பாக பேசப்பட்டது. இதுதவிர பொரிஞ்சு மரியம் ஜோஸ், பாவாட, கம்மட்டிப்பாடம், ஞான் ஸ்டீவ் லோப்பஸ், மேல் விலாசம், இளையராஜா, ஆமி உட்பட ஏராளமான படங்களில் நல்ல வேடங்களில் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஜோஜு ஜார்ஜ் நாயகனாக நடிக்கும் பீஸ் என்ற படத்தில் இவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இடுக்கி மாவட்டம் தொடுபுழா என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த படப்பிடிப்பில் இவர் கலந்து கொண்டார். மாலையில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அருகில் உள்ள மலங்கரா அணைக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிய அனில் தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்க முயன்றனர். ஆனால் ஆழமான பகுதி என்பதால் அவரை காப்பாற்றுவதில் முதலில் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் சிறிது நேரத்திற்குப் பின் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நடிகர் அனில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தொடுபுழா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.