NDA முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா?... பதிலளிக்க மறுப்பு தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர்

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? என்ற கேள்விக்கு மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துள்ளது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் வந்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு, புதிய இந்தியா சமாச்சார் உள்ளிட்ட புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பீகார் சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தனது ஆட்சி முறையால் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மாநிலங்களாக இழந்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெறும் என்றார். இந்தியாவில் பெரும்பாலான கட்சிகள் குடும்பக் கட்சிகளாக உள்ளன. ஆனால், பாஜகவே ஒரு குடும்பம்தான் என்றார். கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் நலன்களுக்காக பாஜக அரசு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. பாஜக ஆட்சியில் 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது. 6 கோடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை தாங்களே விற்பனை செய்துக்கொள்ள முடியும். இது விவசாயிகளின் உரிமை. அதை தான் பாஜக செய்துள்ளது. பாஜக ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது என்றும் கூறினார். தொடர்ந்து, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? என்ற செய்தியாளர் கேள்வி கேட்டபோது, பதிலளிக்க பிரகாஷ் ஜவடேகர் மறுத்துவிட்டார். எந்தக் கூட்டணியாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்க வேண்டும். இதனைபோல், அதிமுக - பாஜக கூட்டணி உள்ளது என்றார்.

More News >>