விவசாயிகள் முற்றுகை.. ஓட்டலின் பின்வழியாக தப்பிய பாஜக தலைவர்கள்..

பஞ்சாபில் பாஜக பிரமுகர்கள் இருந்த ஓட்டலை விவசாயிகள் முற்றுகையிட்டதால், அவர்கள் பின் வழியாக தப்பிச் சென்றனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.26) 31வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் லாபம் என்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

போராடும் விவசாயிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோரும், தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர். ஆனால், சட்டங்களை ரத்து செய்ய முடியாது. அதேசமயம், விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை(எம்.எஸ்.பி) நீடிக்கும் என்று மத்திய அரசு உறுதி கூறி வருகிறது. பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறாததால், விவசாயிகள் போராட்டத்தில் இழுபறி நீடித்த வருகிறது.

இந்நிலையில், டெல்லி சிங்கு எல்லையிலும், திக்ரி எல்லையிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து முகாமிட்டுப் போராடி வருகின்றனர். குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் திருத்தங்களை சட்ட ரீதியாகக் கொண்டு வந்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.இதற்கிடையே பஞ்சாபில் பாக்வாரா என்ற இடத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பாஜக சார்பில் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது ஏராளமான விவசாயிகள் அந்த ஓட்டலின் வாயிலில் முற்றுகையிட்டனர். அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கும் எதிராகவும் கோஷமிட்டனர். இதையடுத்து, ஓட்டலை விட்டு வெளியேற முடியாமல் தவித்த பாஜக மகளிரணி தலைவர் பாரதி சர்மா உள்ளிட்ட தலைவர்கள், ஓட்டலின் பின் வழியாக சென்றனர். ஓட்டல் ஊழியர்கள் அவர்களைப் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதீய கிஷான் யூனியன் துணை தலைவர் கிர்பால்சிங் கூறுகையில், விவசாயிகள் போராட்டத்தைக் குலைக்கும் முயற்சிகளில் பாஜகவினர் ஈடுபடுகின்றனர். இந்த ஓட்டலும் பாஜக பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமானது. அவர் கால்நடைத் தீவனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். விவசாயிகளின் அவரது கம்பெனி பொருட்களைப் புறக்கணித்து வருகிறார்கள் என்றார்.

More News >>