பாலக்காட்டில் கவுரவக் கொலை கலப்பு திருமணம் செய்த வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை
பாலக்காட்டில் வேறு ஜாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபர், பெண்ணின் தந்தை மற்றும் மாமாவால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கவுரவக் கொலை என்று கொல்லப்பட்ட வாலிபரின் தந்தை தெரிவித்துள்ளார்.பாலக்காடு அருகே உள்ள தேன்குறிச்சி எலமந்தம் பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (27). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரபு குமார் என்பவரின் மகள் ஹரிதா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களது காதல் இரு வீட்டினருக்கும் தெரியவந்தது.
இந்த காதலுக்கு ஹரிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த எதிர்ப்பையும் மீறி கடந்த 3 மாதங்களுக்கு முன் அனீஷும், ஹரிதாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் அனீஷ், ஹரிதாவுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அனீஷ் தனது அண்ணனுடன் நண்பர் ஒருவர் வீட்டிற்கு பைக்கில் சென்றிருந்தார். திரும்பி வரும் வழியில் குளிர்பானம் குடிப்பதற்காக அங்குள்ள ஒரு கடையில் வண்டியை நிறுத்தினர்.
இந்த சமயத்தில் அங்கு வந்த ஹரிதாவின் தந்தை பிரபு குமார் மற்றும் மாமா சுரேஷ் ஆகியோர் அனீஷை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் வழியிலேயே அனீஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறிந்ததும் பாலக்காடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அனீஷை வெட்டிக் கொலை செய்தது ஹரிதாவின் தந்தை பிரபு குமார் மற்றும் மாமா சுரேஷ் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் சுரேஷ் கைது செய்யப்பட்டார். தந்தை பிரபு குமாரை போலீசார் தேடிவந்தனர். அவர் கோயம்புத்தூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பாலக்காடு போலீசார் கோயம்புத்தூர் விரைந்து சென்று பிரபு குமாரைக் கைது செய்தனர். இதுகுறித்து அனீஷின் தந்தை கூறுகையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் எனது மகன் அனீஷ், ஹரிதாவை திருமணம் செய்தார். அவர் வேறு ஜாதி என்பதால் இந்த திருமணத்தில் ஹரிதாவின் உறவினர்களுக்கு விருப்பம் கிடையாது. 3 மாதத்திற்கு மேல் இருவரையும் ஒன்றாக வாழ விடமாட்டோம் என்று பிரபு குமாரும், ஹரிதாவின் மாமா சுரேஷும் மிரட்டினர். அதுபோலவே இப்போது அவர்கள் எனது மகனைக் கவுரவக் கொலை செய்து விட்டனர் என்று கூறினார். இதுகுறித்து பாலக்காடு டிஎஸ்பி சசிகுமார் கூறுகையில், கொலை வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு விட்டனர். இது கவுரவக் கொலையா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்றார். இந்த கொலை சம்பவம் பாலக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.