மாணவர் சேர்க்கைக்காக லஞ்சம் வாங்கிய சென்னை கேந்திரியா வித்யாலயா பள்ளி முதல்வர் கைது
1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய சென்னை கேந்திரியா வித்யாலயா பள்ளி முதல்வரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தங்களது குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் கூட தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்காக முட்டிமோதி வருகின்றனர். பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வாங்குவதற்கே நடு இரவில் பள்ளியின் வாசலில் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாணவர்களை தங்களின் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் பேரம் பேசுகிறது. ரூ.1 லட்சம் முதல் பல லட்சங்கள் இதற்காக பெறப்படுகிறது.இந்நிலையில், சென்னையில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில் எல்.கே.ஜி உள்பட ஆரம்ப வகுப்புகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் லட்சக்கணக்கில் பணம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதற்கிடையே, கேந்திரியா பள்ளி முதல்வர் ஆனந்தன் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மாணவரின் பெற்றோரிடம் இருந்து ரூ.1 லட்சம் பெற்றுள்ளார். இதுதொடர்பாக, புகார் தெரியவந்ததை அடுத்து, சிபிஐ அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக முதல்வரை கண்காணித்து வந்துள்ளனர். அப்போது, முதல்வர் லஞ்சம் வாங்க முற்பட்டபோது சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல்வர் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதை அடுத்து அசோக் நகர் பகுதியில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியின் முன்பு பெற்றோர்கள் குவிந்துள்ளனர். ஏற்கனவே, முதல்வர் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் மேலும் புகார்கள் குவியும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com