திருப்பதி மலையில் இரு பக்தர்கள் மயக்கம்: 6 கி.மீ தூக்கிச் சென்று காப்பாற்றிய இஸ்லாமிய காவலர்
கொரோனா பரவல் குறைந்த பிறகு திருப்பதி கோவிலில் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 நாட்கள் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் வழியாகப் பக்தர்கள் பத்து நாட்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தேவஸ்தானம் அறிவித்து இருந்தது.இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி ஒரு வயதான தம்பதியினர் மலைப்பாதை வழியாக கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
அப்போது அவர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. மலைப்பாதையில் பணியில் இருந்த ஷேக் அர்ஷத் என்ற காவலருக்கு இது குறித்த தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த அவர், முதலில் முதியவரைத் தனது முதுகில் சுமந்து சென்று சாலையில் விட்டுள்ளார். பின்னர் 58 வயது நாகேஷ்வரம்மா என்ற பெண்மணியை இரு கைகளிலும் தாங்கி சென்று இறக்கிவிட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அளிக்கப்பட்ட முதலுதவிக்குப் பின்னர் அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.காவலர் ஷேக் அர்ஷத் முதியவர்களை தூக்கிச்செல்லும் புகைப்படத்தை ஆந்திர போலீசார் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு காவலர் ஷேக் அர்ஷத்தை பாராட்டியுள்ளனர். இச்செயல் அவரது பணியின் மீது அவருக்குள்ள பக்தியை காட்டுகிறது என மாநில டி,ஜி.பி., ஷேக் அர்ஷத்தை புகழ்ந்துள்ளார்.