மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டிக்கத் தவறிவிட்டது - சிபிஎம் குற்றச்சாட்டு
ஆறு வார காலத்திற்குள் ஒரு ஸ்கீமை உருவாக்கிட வேண்டுமென்ற தீர்ப்பினை மத்திய அரசு ஆறு வார காலம் கிடப்பில் போட்டதைப் பற்றி உச்சநீதிமன்றம் மத்திய அரசை கண்டிக்கத் தவறிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசின் விளக்கம் கோருகிற மனுவின் மீது திங்களன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று இடைக்கால ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஒரு வரைவு திட்டத்தை தயாரித்து மே மாதம் 3-ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை மே 3-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
காவிரி பிரச்சனையில் மத்திய அரசினுடைய காலம் தாழ்த்துகிற முயற்சிக்கு உதவி செய்யும் வகையிலேயே உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமைந்துள்ளது. ஏற்கனவே ஆறு வார காலத்திற்குள் ஒரு ஸ்கீமை உருவாக்கிட வேண்டுமென்ற தீர்ப்பினை மத்திய அரசு ஆறு வார காலம் கிடப்பில் போட்டதைப் பற்றி உச்சநீதிமன்றம் மத்திய அரசை கண்டிக்கத் தவறிவிட்டது.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் என்று சொல்லவில்லை, ‘ஸ்கீம்’ என்றுதான் குறிப்பிட்டிருந்தோம் என நீதிபதிகள் சொல்லியிருப்பதும், மேலும் இப்பிரச்சனையை குழப்பி விடுவதாக அமைந்துள்ளது.
பிப்.16-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில், நடுவர் மன்றத்தினுடைய அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொண்டு (காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உட்பட) குறிப்பிட்டுள்ள நதிநீர் பங்கீட்டு அளவை மட்டும் நாங்கள் மாற்றம் செய்துள்ளோம் என கூறியிருந்த நீதிபதிகள், அதற்கு மாறாக இப்போது கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மே மாதம் 3-ம் தேதி வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தால்,அதன் பின்னரும் வாதப் பிரதி வாதங்கள் என்ற முறையில் மேலும் இந்த வழக்கை இழுத்துக் கொண்டே செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, இன்றுள்ள பாஜக தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமலாக்குகிற வகையில் அதிக அதிகாரங்கள் கொண்ட வரைவுத் திட்டத்தை செயல்படுத்தாமல், பெயரளவிற்கான திட்டத்தை அமைத்து தீர்ப்பை கிடப்பில் போடுவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஆகவே, எந்த வகையில் பார்த்தாலும் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு தமிழகத்திற்கு நியாயம் வழங்குவதாக அமையவில்லை. மேலும், இத்தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com