உசிலம்பட்டியில் தமிழ் பிரமி எழுத்து கல்வெட்டு முதல்முறையாக கண்டுபிடிப்பு
தமிழகத்தில் உசிலம்பட்டி அருகே தமிழ் பிராமி எழுத்துக்கள் நிறைந்த கல்வெட்டுகள் உசிலம்பட்டியில் முதல்முறையாக கண்டயறிப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அதிகப்படியான தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வரும் சூழலில் உசிலம்பட்டி அருகே உள்ள கொங்க பட்டி என்ற கிராமத்தில் சீலக்காரியம்மன் கோவில் அருகே ஒரு கல்லில் 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டை மதுரை தொல்லியல்துறை குழுவினர் ஆய்வு செய்து தமிழி எழுத்துக்கள் அடங்கிய கல்வெட்டு என்பதை உறுதி செய்துள்ளனர்.மூன்று வரிகள் கொண்ட தமிழ் எழுத்துக்கள் உள்ளதாகவும், சில இடங்களில் வரிகள் சிதைந்து இருப்பதால் அதை நகல் எடுத்து ஆய்வு செய்த பின்னரே கல்வெட்டில் என்ன பொறிக்கப்பட்டுள்ளது தெரியவரும் எனத் தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும் இதுவரை 40 தமிழ் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் மதுரையில் மட்டும் 20 தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது உசிலம்பட்டி அருகே கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்வெட்டு தமிழகத்தில் கண்டறியப்பட்ட 41வது தமிழ் எழுத்து அடங்கிய கல்வெட்டு ஆகும். பெரும்பாலும் சமணர்கள் குகைகளில் மட்டுமே காணப்பட்ட தமிழி எழுத்துக்கள் சமீபகாலமாகப் பிற இடங்களிலும் இருப்பது தெரியவந்துள்ளது. புள்ளிமான் கோம்பை, தாதம் பட்டி மற்றும் கின்னிமங்கலம் பகுதிகளைத் தொடர்ந்து இந்த கொங்கபட்டியிலும் தமிழ் எழுத்துக்கள் அடங்கிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது.இதன் மூலம் எழுத்துக்களை முதலில் எழுதியவர்கள் தமிழர்களே என்பதை நிரூபிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் தமிழ் எழுத்துகளின் தோற்றம் வரலாற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கால கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை தொல்லியல்துறை குழுவினர் இந்த தமிழ் பிராமி எழுத்துக்களை ஆய்வு செய்து அதில் எழுதப்பட்டுள்ளதைப் படித்து வருகின்றனர்.உசிலம்பட்டி பகுதி முழுவதுமாக விரிவான ஆய்வுகள் மேற்கொண்டால் மேலும் தொன்மையான வரலாற்றுச் சின்னங்கள் வெளிப்படும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.