2 தேசிய விருது வென்ற கவிஞரின் புத்தகங்கள்.. மனைவி-மகனிடம் வாங்கிய நிறுவனம்..

தங்க மீன்கள் படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்காக 2013ம் ஆண்டும், சைவம் படத்துக்காக அழகே அழகே பாடலுக்காக 2014ம் ஆண்டும் தேசிய விருது பெற்றவர் கவிஞர் நா.முத்துக் குமார். இவர் 60க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடல்கள் எழுதி உள்ளார். தவிர நியூட்டன் மூன்றாம் விதி (கவிதை தொகுப்பு), கிராமம் நகரம் மாநகரம், பட்டாம்பூச்சி விற்பவன், ஆணா ஆவண்ணா (கட்டுரை) எனப் பல புத்தகங்கள் எழுதி உள்ளார். திரையுலகிலும் ரசிகர்களிடமும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வேகமாக வளர்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவர் மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டு காய்ச்சல் முற்றிய நிலையில் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 41. இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். காஞ்சிபுரம் கன்னிகாபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் தனது 4 வயதில் தாயை இழந்தார். அதன்பிறகு புத்தகங்களில் மூழ்கினார். இயக்குனராக பணியாற்ற விரும்பிய அவர் பாலு மகேந்திராவிடம் 4 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். சீமானின் வீரநடை படத்தில் பாடல் எழுதினார். கிரீடம், வாரணம் ஆயிரம் போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார், இதுவரை சுமார் 1500க்கு மேல் பாடல்கள் எழுதி உள்ளார்.

அனைவரின் பேரன்புக்குப் பாத்திரமான கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் மறைந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டது. கலை இலக்கிய துறையில் நா.முத்து குமார் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக முக்கியமானது. இந்நிலையில் நா.முத்துக் குமாரின் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் அவர் எழுதிய நூல்களைக் கொண்டு சேர்க்கும் பணி தொடங்கியது .சென்னை கே.கே.நகரிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், மறைந்த கவிஞர் நா.முத்து குமாரின் மனைவி ஜீவா மற்றும் அவரது மகன் ஆதவன் முத்துக்குமார் ஆகியோரிடமிருந்து, நா.முத்துக்குமாரின் புத்தகங்களுக்கான பதிப்புரிமை ஒப்பந்தத்தை டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த சந்திப்பில் முத்துக்குமாரின் குடும்பத்தாரிடம், டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் ரூ.2 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. முத்துகுமாரின் மகன் ஆதவன் தன் அப்பாவைப் பற்றி வாசித்த கவிதை பார்வையாளர்களை உருக்குவதாக அமைந்தது.இந்நிகழ்வை முன்னின்று ஏற்பாடு செய்த இயக்குநர் ஏ.எல்.விஜய் ஆகியோருடன், எழுத்தாளர் அஜயன்பாலா, வழக்கறிஞர் சுமதி மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மு.வேடியப்பன் மற்றும் வழக்கறிஞர் சீனிவாசன் ஆகியோரும் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் ஏ.எல்.விஜய், கொரோனா சூழல் சரியானதும், சென்னையில் முத்து குமாருக்காகத் திரை உலகமே ஒன்றிணைந்து பிரமாண்டமான விழா எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

More News >>