உருமாறிய கொரோனா வைரஸ் கேரளாவில் பரவியதா? சுகாதாரத் துறை அமைச்சர் பரபரப்பு தகவல்
இங்கிலாந்தில் இருந்து கேரளா வந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்றும், அவர்களுக்கு உருமாறிய கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் இருப்பதாகவும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 22,272 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,69,118 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 251 பேர் மரணமடைந்தனர். இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 349 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 2 லட்சத்து 81 ஆயிரத்து 667 பேர் சிகிச்சையில் உள்ளனர். உலக அளவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 கோடியைத் தாண்டிவிட்டது. 17 லட்சத்து 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு மெல்ல மெல்லக் குறைந்து வருகின்ற போதிலும் கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவது மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பரவிவரும் கொரோனா வைரசை விட இந்த உருமாறிய வைரஸ் 70 சதவீதம் வேகமாகப் பரவுவது தெரியவந்துள்ளது. இதனால் இங்கிலாந்தில் லண்டன் உள்பட சில பகுதிகளில் மீண்டும் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ், இந்தியா, ஜெர்மனி, சவுதி அரேபியா, துபாய் உள்பட பெரும்பாலான நாடுகள் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளது.இதற்கிடையே கடந்த ஒரு வாரத்தில் இங்கிலாந்திலிருந்து டெல்லி, அமிர்தசரஸ், சென்னை உள்பட நகரங்களுக்கு வந்த பயணிகளில் 22 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக பூனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவில் மட்டுமே அவர்களுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என்பது குறித்துத் தெரியவரும்.
இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து கேரளா வந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கூறியது: இங்கிலாந்திலிருந்து கேரளா வந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தால் மட்டுமே அவர்களுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தெரிய வரும். ஆனாலும் ஒரு சில பகுதிகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் உள்ள 4 விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இங்கிலாந்தில் இருந்து கேரளா வந்த பயணிகள் அனைவரும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறினார்.