டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள சென்ற 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 273 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 251 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த ஜூன் 2ம் தேதிக்குப் பின்னர் மரண எண்ணிக்கை தற்போது தான் குறைந்துள்ளது. இதற்கிடையே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. வருகிற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஆந்திரா, பஞ்சாப் உள்பட 4 மாநிலங்களில் இதற்கான ஒத்திகை நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையே இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவது உலகளவில் பீதியை அதிகரித்துள்ளது. இதனால் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகள் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே இங்கிலாந்திலிருந்து கடந்த சில தினங்களில் இந்தியா வந்த 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கொரோனா பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தான் தாக்கி உள்ளதா என்பது குறித்து தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும்.
இந்நிலையில் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்புக்குச் சென்ற 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த மாதம் 26ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு விழா அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து பாதுகாப்புப் படை வீரர்கள் டெல்லிக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். இவ்வாறு செல்பவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 1000க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராணுவ வீரர்களுக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து குடியரசு தின விழாவில் கொரோனா பரிசோதனையை மேலும் தீவிரப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.