மனித உரிமை ஆணைய தலைவர் தேர்வுக்கான கூட்டம்: புறக்கணித்தது ஏன்? ஸ்டாலின் விளக்கம்
மாநில மனித உரிமை ஆணைய தலைவர் தேர்வுக்கான கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புறக்கணித்தார்.இது தொடர்பாக அவர் அரசு முதன்மைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடித விவரம்:மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தி, தமிழகத்தில் மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் உயர்வான நோக்குடன் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1997 ஆம் ஆண்டு கருணாநிதியால் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது.
மனித உரிமைகள் மீறப்படும் நிகழ்வுகளில் நீதி வழங்கும் அமைப்பாக இந்த ஆணையம் செயல்பட்டு வந்தது.ஆனால் மனித உரிமைகள்” என்ற உள்ளார்ந்த அடிப்படைக் கொள்கை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அதிமுக ஆட்சிக்கு அதன் மீது தேவைப்படும் அளவுக்கு நம்பிக்கையில்லை என்பதை, கடந்த பத்தாண்டுக் கால ஆட்சியின் அணுகுமுறை வெளிப்படுத்தியிருக்கிறது. மனித உரிமைகள் கண்மூடித்தனமாக மீறப்பட்டுள்ளன.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு, ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு, சாத்தான் குளம் காவல் நிலைய மரணம், டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை, பாலியல் தொந்தரவுக்குப்படுத்தப்பட்ட பெண் எஸ்.பி, பொள்ளாச்சி இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, சேலம் எட்டு வழிச்சாலையை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது பலப் பிரயோகம், கதிராமங்கலம் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய பேராசிரியர் ஜெயராமன் மீது தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கை, டாஸ்மாக்கை மூட அமைதியாகப் போராடிய தாய்மார்கள் மீது சரமாரித் தாக்குதல், சுற்றுப்புறச்சூழலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சேலம் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் என்று, வரிசையாக மனித உரிமைகள் அதிமுக ஆட்சியில் பறிபோயிருக்கின்றன. இந்த ஆட்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அளித்த பரிந்துரைகளுக்கு, எந்தவித மதிப்பும் அளிக்கப்படவில்லை என்ற நிலை இன்றுவரை தொடருகிறது.
மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவி ஓராண்டு காலத்திற்கு முன்பே காலியாகி விட்டது. அடுக்கடுக்காக மனித உரிமைகள் மீறப்பட்ட போதும், ஆணையத்தின் தலைவர் பதவியை நிரப்பாமல் அமைதி காத்து விட்டு, தற்போது ஆட்சி முடிவுக்கு வரப்போகும் கடைசிக் கட்டத்தில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியை நிரப்புவதற்காகத் தேர்வுக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இப்போது திடீரென்று கூட்டப்படும் இந்த தேர்வுக்குழு கூட்டத்தினால் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டுவிடாது; அதில் பங்கேற்பதால் எந்த பயனும் உண்டாகாது.ஆகவே, அதிமுக ஆட்சியின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து, மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுக் கூட்டத்தினை புறக்கணிக்கிறேன் இவ்வாறு ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.